மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் போற்றும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், இந்தியையா கற்றுக் கொண்டார்?. சங்க இலக்கியங்களையும், ஐம்பெருங்காப்பியங்களையும் எழுதியவர்கள் இந்தியை கற்றுக்கொண்டா எழுதினார்கள்?. உலகில் முதலில் தோன்றிய மொழியான தமிழை அழிக்கும் நோக்கில், இந்தியை புகுத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும்-தமிழ் மண்ணும் மும்மொழிக் கொள்கையை எந்நாளும் ஏற்க போவதில்லை. பாஜக அரசு நிதியை விடுவித்து மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.