தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14 கோடி கையாடல் நடைபெற்றுள்ளது குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 2024-25ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஊரக வேலைத் திட்டத்தின் படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் எந்த வேலையும் செய்யாத 37 பேருக்கு மொத்தம் ரூ.8.25 லட்சம், அதாவது சராசரியாக ஒருவருக்கு ரூ.22,297 வீதம் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய மோசடிகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.