தமிழ் மொழியில் ரூ.30 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெட் பிளவர்’. இந்த படத்தை இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். சயின் பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் நடித்துள்ளார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம் இந்த படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. ரெட் பிளவரின் விஷுவல் எபெக்ட்ஸ் இயக்குனர் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் விஎப்எக்ஸ் நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் கண்காணிக்கப்படுகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே.மாணிக்கம், “இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை தரும் இப்படத்தில் ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்சன் கலந்திருக்கும். மேலும் உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
