தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான ‘இறைவன், சைரன்’ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காதலிக்க நேரமில்லை.’ இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் சக்தி வாசுதேவன் “பாக்சர் செல்வராஜ்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
