நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கினார். சென்னையை அடுத்த பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டி கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “ பெஃப்சி-யில் மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் 21,000 பேர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கின்றனர்.அல்லது வெளியில் இருந்து பணியாற்ற வருகின்றனர். பெஃப்சி தொழிலாளர்கள் பணி 12 மணி நேரம் என வரையறுக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் தொழிலாளர்கள் 4 மணி நேரம் கூடுதலாக பயணிக்கின்றனர். இதனால் 16 மணி நேரம் தொழிலாளர்கள் உழைப்பிற்காக நேரத்தை செலவிடக்கூடிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசிடம் தெரியப்படுத்தினோம். பையனூரில் முதற்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகளைத் தொடங்க உள்ளோம். ஏற்கனவே அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்க படாததால் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு மாதத்திற்குள் அதன் வேலைகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். துணை முதலமைச்சர் திறந்து வைக்க சொல்லி கோரிக்கை வைத்தோம். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆயிரம் குடியிருப்புகளை நாங்கள் தொடங்கியபோது முதற்கட்டமாக 500 சதுர அடியுள்ள குடியிருப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் ஒரு உறுப்பினர் கட்டவுள்ள நிலை உள்ளது. அதில் கட்டமுடியாமல் இருக்கும் உறுப்பினர்கள் நிலை குறித்து அனைத்து பிரபல நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெரியப்படுத்தினோம். அதில் விஜய் சேதுபதி ஒரு உறுப்பினருக்கு 50,000 வீதம் 250 உறுப்பினர்களுக்காக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். முதலில் 2 லட்சம் ரூபாய் கட்டும் 250 உறுப்பினர்களின் கணக்கில் விஜய் சேதுபதியின் பணம் வரவு வைக்கப்படும். இந்த உதவியை வழங்கிய அவருக்கு சங்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு முதலில் அமையும் குடியிருப்புக்கு ‘விஜய் சேதுபதி டவர்’ என்று அழைக்க முடிவு செய்துள்ளோம். மொத்தம் ஆறு டவர் வரவிருக்கிறது. மீதமுள்ள ஐந்து டவருக்கு வசதி உள்ள நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம்” இவ்வாறு பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.