செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டு கிடைத்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதேநேரம், இப்படம் தெலுங்கில் ‘யுகனிக்கி ஒக்கடு’ என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். 12ம் நூற்றாண்டில், சோழர்கள் பாண்டியர்களால் தோற்கடிக்கப்படுகின்றனர், இதனால் சோழ மன்னனும் அவனது மக்களும் பாண்டியர்களுடைய மீன் சிலையுடன் தலைமறைவாக சென்று வாழ்ந்துவருகின்றனர். எப்படியும் நல்லகாலம் வரும், செய்தியை தூதன் ஒருவன் எடுத்துவருவான், சோழர்குலம் அழியாமல் தழைத்து வாழும் என்ற நம்பிக்கையுடன் சோழ மக்கள், தங்களை யாரும் நெருங்கி விடக்கூடாது என 7 பொறிகளை வைத்து வாழுகிறார்கள். அதற்குபிறகு 8 நூற்றாண்டுகளுக்கு பின் அவர்களை தேடிச்செல்லும் ஒரு ஆராய்ச்சியாளரை பின்தொடர்ந்துவரும் எதிரிக்குழு என படம், அதுவரை தமிழ்சினிமா பார்க்காத கதைக்களத்தை கொண்டிருந்தது. படத்தின் இயக்கமும், பின்னணி இசையும் எக்காலத்திற்குமான சிறந்த படைப்பாற்றலை கொடுத்திருந்தது. இந்த நிலையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மார்ச் 14ம் தேதி மறு-வெளியீடாகவுள்ளது. ஆந்திரம், தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தை மறு-வெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
