தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர், விஜய். இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் இதுவும் ஒன்று. விஜய்யுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ‘வெற்றிமாறன், வெற்றி, மாறன்’ என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ‘மெர்சல்’ படத்தின் மறு வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறைகளையொட்டி வெளியாக உள்ளது.
