மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம்சாட்டி இருந்தார். மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 எம்.பி. தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் கூறி இருந்தார். நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதோடு தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுவதாக அமைந்துவிடும் இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது என்றும் அவர் கூறி இருந்தார். தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விஆதிக்க தேர்தல் கமிஷனில் பதிவு பெற்றுள்ள 45 கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை வருகிற 5-ம் தேதி தலைமைச்செயலகத்தில் கூட்டி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இப்போது இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
