பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடி இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர் கே.ஜே. யேசுதாஸ். இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களா மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ‘பொம்மை’ என்னும் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், ‘கொஞ்சும் குமரி’ திரைப்படத்தில் இவரது பாடல் முதலில் வெளிவந்தது. 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. இவர் பாடிய ‘தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு’, ‘வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்’, ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் யாரும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இவர் குரலில் உருவான ‘அரிவராசனம்’ எனும் பக்தி பாடல் கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சன்னிதானத்தின் நடை திறப்பு மற்றும் சன்னிதான நடை சாத்தும் நேரங்களில் பாடப்படுவது தனிப்பெரும் சிறப்பு பெற்றவை. இசை ரசிகர்களால் ‘கந்தவர்க் குரலோன்’ என அன்பாக அழைக்கப்படுகிறார் கே.ஜே.யேசுதாஸ். இந்த நிலையில், யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
