”தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.தேர்தல்களில் ஓரணியாக போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ,கோரிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில் அநுரகுமார அரசின் 2025ஆம் ஆண்டுக்கான ”கன்னி” வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதில் கூட ஒன்றுபட மறுக்கும் இவர்கள் எப்படி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழர் உரிமைநலன் சார்ந்து பாராளுமன்றத்தில் ஓரணியாக அழுத்தம் கொடுப்பார்கள்?”
கே.பாலா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான ”கன்னி”வரவு செலவுத்திட்டத்தை (பட்ஜெட்) கடந்த பெப். 17 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றிய நிலையில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் விவாதம் நிறைவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது எதிர்கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி,ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கியதேசியக்கட்சி, நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன,ரவி கருணாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜனசக்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன .அதேநேரம் அரசு தரப்பினருடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியளித்தார்.
அதுமட்டுமல்ல அநுரகுமார அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத்திட்டத்தினை சிங்கள எதிர்க்கட்சிகள் ,அவற்றோடு பங்காளிகளான மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்த்து வாக்களித்தபோது வழக்கம் போலவே ”நவக்கிரகங்கள்”போல் இருக்கும், செயற்படும்,முடிவுகளை எடுக்கும் தமிழ் தேசியக்கட்சிகள் அநுரகுமார அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு முடிவுகளை எடுத்து ”நாம் எந்த விடயத்திலும் ஒற்றுமையாக முடிவுகளை எடுக்க மாட்டோம்” என்பதனை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளன. அது எவ்வாறு என்பதனைப் பார்ப்போம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான ”கன்னி” வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சிகளினதும் தலைவர்கள், எம்.பி.க்கள் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினர். எதிர்கட்சிகளை சேர்ந்த சிலர் கடுமையாக விமர்சித்தனர் . சிலர் மேலோட்டமாக விமர்சித்தனர் .இன்னும் சிலர் வரவு செலவுத்திட்டத்தில் என்ன உள்ளது என்ன இல்லை என்பது அவர்களுக்கே தெரியாமல் பேசினர். அரச தரப்பினர் வழக்கம் போலவே புகழ்ந்து தள்ளினர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடுகளை விடுவோம் .தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை மட்டும் பார்ப்போம். அந்தவகையில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள அநுரகுமார அரசாங்கம் வடக்கு போலவே யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிழக்கு மாகாணத்தை முற்றாக புறக்கணித்து விட்டதாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் எம்.பி.க்களும் கடுமையாக விமர்சித்ததுடன் வரவு செலவுத்திட்டத்த்தை தூக்கி எறிய வேண்டும் எனவும் கொந்தளித்தனர். மலையக தமிழ் அரசியல் கட்சிகளினது தலைவர்கள் எம்.பி.க்களும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தனர். அவர்கள் தமது விமர்சனத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ் தேசியக்கட்சிகளைப் பொறுத்தவரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராகக்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அநுரகுமார அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்தது. இனவாதத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எதனையும் இதில் பார்க்க முடியவில்லை.ஜனாதிபதி குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கில் மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே எதிர்பார்ந்தோம். இந்த மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் எமக்கு கிடையாது என்று அத தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிபடத்தெரிவித்ததுடன் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்தும் வாக்களித்தார்
அதேவேளை தமிழரசுக்கட்சியின் சார்பில் பேசிய பலரும் வரவு செலவுத்திட்டத்தை கடுமையாக விமர்சிக்கவோ எதிர்ப்போமெனக் கூறவோ இல்லை. கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.நிலையான அரசியல் தீர்வு ஊடாக மாத்திரமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றே கூறினார்கள் .இதனால் வரவு செலவுத்திட்டத்தில் தமிழரசுக்கட்சி என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வாக்களிப்பில் பங்கேற்காது தவிர்த்து விட்டனர்.
இந்த பங்கேற்காமையை எதிர்ப்பு என்றோ வாக்கெடுப்பு பகிஷ்கரிப்பு என்றோ நடுநிலை என்றோ கருத முடியாது.ஏனெனில் ஒன்று ஆதரவாக வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.அல்லது சபையில் அமர்ந்திருந்தவாறு எதிர்த்தோ, ஆதரவாகவோ வாக்களிக்காது நடு நிலை என அறிவித்திருக்க வேண்டும். அல்லது வாக்கெடுப்பை பகிஸ்கரிக்கின்றோம் என் அறிவித்து விட்டாவது சபைக்கு வராதிருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாது இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காதது சபைக்கு சமூகமளிக்காதோர் என்ற பட்டியலில் மட்டுமே சேரும். எனவே தமிழரசுக்கட்சியினர் வாக்களிப்பில் பங்கேற்காமை விழலுக்கிறைத்த நீராகிவிட்டது.
ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யாகவுள்ள தமிழீழ விடுதல் இயக்கத்தின் (ரெலோ) தலைவரான அடைக்கலநாதன் எப்போதும் ”கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக”இருப்பவர். எல்லோருக்கும் ”ஆமாம் சாமி ”சொல்லி ”உங்களின் முடிவே எனது முடிவும்”’உங்களுக்கே எனது ஆதரவு” ‘,என்று சொல்லிவிட்டு தனது சொந்த இலாபம் கருதி முடிவுகளை எடுப்பவர்.அதனால்தான் வரவு செலவுத்திட்டம்தொடர்பில் இறுதிவரை கள்ள மௌனத்தில் இருந்துவிட்டு சத்தமின்றி ஆதரவாக வாக்களித்துவிட்டு சென்று விட்டார்.
அடுத்தவரான சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யும் பிரபாகரனினதும் விடுதலைப் புலிகளினதும் பெயரைப் பயன்படுத்தி தன்னை ஒரு விடுதலைப் புலிகளின் தீவிர பற்றாளராக காட்டுபவரும் எந்தக்கொள்கையுமில்லாத ,மாறாட்ட அரசியல் செய்பவருமான அர்ச்சுனா இராமநாதனும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற சம்பிரதாயங்கள். விதி முறைகள் நடைமுறைகள் தொடர்பில் எதுவுமே தெரியாத அர்ச்சுனா எம்.பி. வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்த பெப்ரவரி 17 ஆம் திகதி மாலை இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டமூல விவாதத்தில் பங்கேற்று அந்த விடயத்துக்கு புறம்பாக வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பேசினார். எதிர்க்கட்சிகள் பக்கத்தில் இந்த வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்கும் ஒரேயொருவர் தான் மட்டுமே எனக்கூறி வரவு செலவுத்திட்டத்தை புகழ்ந்து தள்ளினார் . உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துவிட்டு தனது யூடியூப் சனலில் அநுரகுமார அரசின் வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் தான் ஆதரவாக வாக்களித்ததாகவும் கூறினார்.
அதாவது நடந்ததுஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டமூல விவாதம் என்பதை அறியாது. தான் எந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்களித்தேன் என்பதுகூடத்தெரியாது வாக்களித்துவிட்டு அநுரகுமார அரசின் வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் தான் ஆதரவாக வாக்களித்ததாகவும் முட்டாள்தனமாக கூறினார் .பின்னர் அவர் வரவு செலவுத்திட்டத்தில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றுகையில் அநுரகுமார அரசையும் வரவு செலவுத்திட்டத்தையும் மிகக்கடுமையாக எதிர்த்து விமர்சித்தார். அரசு தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாகவும் வசைபாடினார்,இந்நிலையில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மீது பெப்ரவரி 25 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆகவே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதில் அர்ச்சுனாவுக்குள்ள குழப்ப நிலை போன்றே அவர் வாக்கெடுப்பில் பங்கேற்காமை க்கு என்ன காரணம் என்பது தொடர்பில் மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளில்,தேர்தல் போட்டிகளில் தமிழ் தேசியக் கட்சிகளிடையில் ஏற்படும் குழப்பம், முரண்பாடுகள் போன்றே அநுரகுமார அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ”கன்னி” வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பதிலும் தமிழ் தேசியக் கட்சிகளிடையில் குழப்பநிலை, முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனால் தான் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் எம்.பி. எதிர்த்தார். ஆதரவா எதிர்ப்பா என்பதனை இறுதிவரை அறிவிக்காத தமிழரசுக்கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. வரவு செலவுத்திட்டத்தை முதல்நாளில் புகழ்ந்து தள்ளி தனது முழுமையான ஆதரவினைத் தெரிவித்த அர்ச்சுனா எம்.பி. பின்னர் வரவு செலவுத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து விமர்சித்து விட்டு வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.
எனவே ஒரு வரவு செலவுத்திட்டத்தில் கூட தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரே முடிவை எடுக்க முடியாத இந்த தமிழ்த்தேசிய கட்சிகளும் தலைவர்களும் எம்.பி.க்களும் தமிழ் மக்களின் பிரச்சினைக்காண தீர்வில் இவர்கள் எப்படி ஒன்றாக நிற்பார்கள், எப்படி ஒரே முடிவை எடுப்பார்கள், எப்படி ஒரே தீர்வைக் கோருவார்கள் என்பதே தமிழ் மக்களின் இன்றைய கேள்வியாகவுள்ளது.