பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி என்ற அரசியல் கட்சியின் தலைவர் மவுலானா ஹமிதுல் ஹக் கொல்லப்பட்டார். இதுபற்றி காவல் துறையின் ஐ.ஜி. ஜுல்பிகர் ஹமீத் கூறும்போது, வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு வழிபாட்டாளர்கள் மதர்சாவின் இறை வணக்க அறையின் மைய பகுதியில் கூடியிருந்தனர். அப்போது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில், அரசியல் கட்சி தலைவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 3 போலீசார் உள்பட 15 பேர் காயமடைந்து உள்ளனர் என்றார். தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையும், மீட்பு குழுவினரும் சென்றுள்ளனர். தாக்குதலில் 20 பேர் காயமடைந்து உள்ளனர் என மீட்பு குழுவினர் கூறுகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், ஹமிதுல் ஹக்கை இலக்காக கொண்டே இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
