நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார். அதன்பிறகு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக, அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்து 1967-ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர். கட்சி ஆரம்பித்து 1977-ம் ஆண்டு தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்தார். அவர்கள் இருவருமே மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். அதுதான் வரலாறு, அதேபோல் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும் என்றார். இந்த விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார். ’35ஆண்டு கால அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்று அவர் பேசினார். இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரமாட்டார். விஜய் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை. தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது. தனித்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் கூறி னார்.