அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அவை முயற்சியால், இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவு பெறும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும். ரம்ஜான் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் மாதத்தை வரவேற்கிறார்கள். இதனால் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறினார்.
