பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே மல்லாகம், கல்லாரை கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வளர்மதி சனசமூக நிலையத்தின் தலைவர். இ. மிதுஷன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடாவில் இருந்து வருகை தந்திருந்த ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஆசிரியர்கள் சி. நாகதீபன், சி. சிவசோதிநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணத்தில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பசுமை அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிதி அனுசரணையை ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் “கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல்” அமைப்பினூடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் அவர்கள் எமது தாய்மண்ணாம் தாயகத்தில் பல்வேறு தேவைகளைக் கொண்ட எமது உறவுகளுக்கு உதவிட கனடாவில் பல அமைப்புக்கள் முன்னின்று உழைத்து வருகின்றன என்றும் அவற்றில் ஒன்றுதான் ரொறன்ரொ ம னித நேய அமைப்பு என்றும் அதன் மூலம் தாயகத்தில் கல்வி உபகரணங்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு கடந்த பல வருடங்களாக உதவி வருகின்றது என்றும். தாயகத்தில் இவ்வாறான உதவிகளை பெற்று இணைப்புப் பாலமாக விளங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்திற்கும் அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அவரது உதவியாளர்களுக்கும் கனடா வாழ் தமிழ் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம்மைப் போலவே கனடாவில் வாழும் பல அன்பர்கள் ரொறன்ரொ ம னித நேய அமைப்பு ஊடாக தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றார்கள் என்றார்