பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாடகி கல்பனா, கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாடகி கல்பனா சுயநினைவுக்கு திரும்பியாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடகி கல்பனா தூக்க மாத்திரை சாப்பிடத்தையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.