தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது” என்றார். மேலும் அவர், “ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது? தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்” என்றார். இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகம் போடுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து ரகுபதி கூறுகையில், ” அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், கூட்டத்தில் பங்கேற்று நாடகத்தை நடத்தியுள்ளது அதிமுக. பாஜகவுடன் நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெறப் போவதில்லை” என்றார்.
