காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான மணீஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய ‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பின்தங்கியுள்ள மத்திய மாநிலங்கள் மட்டுமே கூடுதல் தொகுதிகளைப் பெறும் நிலை உருவாகும். குறிப்பாக, 13 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மற்றும் 10 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலங்களில் அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, எந்த அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட உள்ளது என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. உதாரணமாக, அரியானா மாநிலத்துக்கு இணையான தொகுதிகளின் எண்ணிக்கையை பஞ்சாப் ஏற்குமா? தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல், அதே நிலை தொடா்வதற்கு இமாச்சலபிரதேசம் உடன்படுமா? 6 என்ற எண்ணிக்கையில் இருந்து 9 தொகுதிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் உயா்வதை ஜம்மு-காஷ்மீா் ஏற்குமா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழும். எனவே, தொகுதிகள் மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
