-அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி எச்சரிக்கை
(நேர்காணல் – நா.தனுஜா)
இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியல் தற்போது சீரழிந்த நிலையில் இருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் நிலவும் பிளவுகளே அதற்குப் பிரதான காரணமாகும். தமிழ் மக்கள் இன்னமும் தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபாட்டோடு தான் இருக்கிறார்கள். எனவே எமது சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் ஏதோவொரு வகையில் ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும். மாறாக அக்கட்சிகள் பிளவுபட்டு நின்று தேர்தல்களில் போட்டியிடும் பட்சத்தில், தமிழ்த்தேசிய அரசியல் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்படும் என புலம்பெயர் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரும், கனடாவைத் தளமாகக்கொண்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் அனைத்துல தமிழர் பேரவையின் இடைக்கால நிர்வாக சபையின் தலைவருமான நிமல் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
அண்மையில் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியபீடத்தின் சார்பில் செய்தியாளர் நா. தனுஜா அவரை நேர்காணல் செய்தார். பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன் அவர்களது ஏற்பாட்டில் இந்த நேர்காணல் இடம்பெற்றது.
சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர் தமிழ்த்தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிமல் விநாயகமூர்த்தியும், மேலும் பல புலம்பெயர் தமிழர்களும் இணைந்து கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கக்கூடியவகையில் ‘அனைத்துலக தமிழர் பேரவை’ எனும் புதிய புலம்பெயர் தமிழர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அதனையடுத்து இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனும், சிவில் அமைப்புக்களுடனும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தும் நோக்கில் இலங்கக்கு சென்றிருந்த நிமல் விநாயகமூர்த்தி, ‘வீரகேசரி’ வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:
கேள்வி – நீங்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, பிறிதொரு நாட்டில் உங்களது தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு என்ன காரணம்?
பதில் – ஒரு குறிப்பிட்டகால இடைவெளியின் பின்னர் இலங்கைக்குள்ளேயே தமிழ்த்தேசிய அரசியலைப் பேசக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் ஒரு பேரழிவைச் சந்தித்தன் பின்னர், புலம்பெயர் தேசங்களிலிருந்து தமிழ்த்தேசிய செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் காணப்பட்டது. அதற்கமைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் தமிழ்த்தேசிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது களமும், புலமும் இணைந்த செயற்பாடுகளைத்தான் முன்னெடுத்துவருகிறோம். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இன்னமும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வோ அல்லது சுதந்திரமோ கிடைக்கவில்லை என்ற விசனத்துடன் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்யும் நோக்குடன் நாம் புலம்பெயர் தேசங்களிலிருந்து செயற்பட்டுவருகிறோம்.
கேள்வி – மிகநீண்டகாலமாக ஏனைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றிவந்த நீங்கள், தற்போது புதிதாக அனைத்துலக தமிழர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கியது ஏன்?
பதில் – 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் புலம்பெயர் தேசங்களில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கப்பட்டது தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். புலம்பெயர் தேசங்களிலிருந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்ற எண்ணப்பாடு எனக்கும் இருந்ததன் காரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் முதல் அதனுடனிருந்து தொடர்ந்து செயற்பட்டுவந்தேன். இருப்பினும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் கடைசியாக நடைபெற்ற தேர்தலில் பங்கேற்பதற்கான வாய்ப்பு எனக்கும், என்சார்ந்தவர்களுக்கும் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க நிர்வாகத்திடம் முறைப்பாடளித்திருந்த போதிலும், இதுவரை அதற்குரிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. எதுஎவ்வாறெனினும், இன்னமும் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளுக்கான தேவையும், இடைவெளியும் இருப்பதனால், எம்மைப்போன்ற ஒரே சிந்தனையுடைய தரப்பினருடன் நடாத்திய கலந்துரையாடல்களை அடுத்து புதியதொரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு எந்தோம். அதனையடுத்து நானும், ஏனைய நால்வருமாக ஐவர் கொண்ட ஸ்தாபகக்குழுவொன்றை உருவாக்கினோம். நாங்கள் இணைந்து கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து போன்ற புலம்பெயர் தமிழர்கள் செறிந்துவாழும் நாடுகளிலிருந்து 50 ஸ்தாபக உறுப்பினர்களைத் தெரிவுசெய்து இணைத்துக்கொண்டோம். பின்னர் ஸ்தாபகக்குழு உறுப்பினர்கள் ஐவரும், ஸ்தாபக உறுப்பினர்கள் 50 பேரும் இணைந்து 21 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையைத் தெரிவுசெய்தோம். அதன் தலைவராக நான் செயற்பட்டுவருகிறேன். அதன்படி அனைத்துல தமிழர் பேரவையின் யாப்பைத் தயாரிக்கும் பொறுப்பு இந்த இடைக்கால நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே யாப்பு தயாரிக்கப்பட்டு, தேர்தல் ஊடாகத் தெரிவுசெய்யப்படும் நிர்வாக சபையே நிரந்தரமானதாக இருக்கும்.
கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துல தமிழர் பேரவையின் பிரதான நோக்கம் ஈழத்தமிழர்களை வலுவூட்டுவதேயாகும். அதன்படி ஈழத்தமிழர்களை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியில் வலுவூட்டும் அதேவேளை, கலாசார ரீதியிலான நிலைத்திருப்பை உறுதிசெய்யவேண்டிய அரசியல் காணப்படுகிறது. அதேபோன்று நாம் அரசியல் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், வட-கிழக்கு மாகாணங்கள் ஈழத்தமிழர்களின் தேசம், தமிழர்கள் இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு இனம் எனும் மூன்று கோட்பாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம். இம்மூன்று கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவோம்.
கேள்வி – இலங்கை அரசாங்கத்துடனும், உள்நாட்டில் இயங்கிவரும் சிவில் அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவீர்களா?
பதில் – இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது பற்றி நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஏனெனில் அதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் பேசவேண்டுமாயின், அதற்கென உள்நாட்டில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்க்கட்சிகளும், அவற்றின் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களின் நலன்களைப் புறந்தள்ளும் வகையிலும், அவற்றுக்கு விரோதமானவையாகவும் அமையும் பட்சத்தில் அப்போது எமது கருத்துக்களைக் கூறவும், விமர்சனங்களை முன்வைக்கவும் தயாராக இருக்கிறோம்.
ஆனால் எனது தற்போதைய இலங்கை விஜயத்தின்போது வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன். அநேகமான சந்திப்புக்கள் ஆக்கபூர்வமானவையாக அமைந்திருந்ததுடன், நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கின்றன. எனவே வட, கிழக்கு மாகாணங்களை தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றியமைக்கமுடியும் என்பது பற்றி சந்திக்கிறோம். அம்மாகாணங்களை நாம் விரும்பியவாறு அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நாம் ஆயுதப்போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில், அதற்குச் சமாந்தரமாக எமது மக்களின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்திருந்தோம். ஆகையினால் பொருத்தமான வழிமுறைகளின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு மேம்படுத்தமுடியும் என்பது பற்றி விரைவில் ஆராய்வோம்.
கேள்வி – இருப்பினும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்தவாறு அவற்றின் தனிப்பட்ட நலன்களுக்காக தமிழ்த்தேசிய அரசியலைப் பயன்படுத்துவதாக இலங்கையில் வாழும் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் – ‘புலம்பெயர் மக்கள் அவர்களது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்’ என்று கூறுவதும் ஒரு வகையான பிரதேசவாதம் தான். இது வெறுமனே ஒரு தர்க்கத்தில் தம்மைத் தற்பாதுகாத்துக்கொள்வதற்காகக் கூறப்படும் விடயமே தவிர, அக்கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியலில் தலையிடக்கூடாது எனப் பெரும்பான்மையானோர் கூறவில்லை. மாறாக ஒருசிலர் தம்மை முன்னிலைப்படுத்துவதற்காகவும், தமது கருத்துக்களை மேலோங்கச்செய்வதற்காகவும் அவ்வாறு கூறுகின்றனர். யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் காத்திரமான செயற்பாடுகளின் விளைவாகவே இன்றளவிலே வட, கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் எழுந்துநிற்கின்றன. எனவே இவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தாமல், அவற்றுக்கு அப்பால் செயற்படுவதன் ஊடாகவே எமது பிரதேசங்களை அபிவிருத்திசெய்யமுடியும்.
கேள்வி – இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் சமகாலப்போக்கினை அவதானித்துவருகிறீர்களா?
பதில் – இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியல் சீரழிந்த நிலையில் இருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் நிலவும் பிளவுகளே அதற்குரிய பிரதான காரணமாகும். தமிழ் மக்கள் இன்னமும் தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபாட்டோடு தான் இருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களில் கணிசமானோர் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்திருப்பதுடன், மற்றொரு பகுதியினர் யாருக்கும் வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியல் கோட்பாட்டின் மீதான அதிருப்தியன்றி, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் மீதிருக்கும் அதிப்தியின் விளைவாகவே இம்முறை பலர் வாக்களிக்கவில்லை.
தற்போது நாம் முன்னெப்போதுமில்லாத வகையில் பல கட்சிகளாகவும், குழுக்களாகவும் பிரிந்திருக்கிறோம். இதற்கு முன்னைய தேர்தல்களில் வட, கிழக்கு மாகாணங்களில் இவ்வளவு சுயேட்சைக்குழுக்களோ, இவ்வளவு வேட்பாளர்களோ களமிறங்கியிருக்கவில்லை. இவையனைத்தும் எமக்குள் நிலவும் முரண்பாடுகளையே காண்பிக்கின்றன. எனவே எமது சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளும் ஏதோவொரு வகையில் ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும். மாறாக தமிழ்த்தேசிய கட்சிகள் பிளவுபட்டு நின்று தேர்தல்களில் போட்டியிடும் பட்சத்தில், தமிழ்த்தேசிய அரசியல் மிகமோசமான நிலைக்குத்தான் தள்ளப்படும். இருப்பினும் இந்நிலையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கேள்வி – தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பங்களிப்புச்செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா?
பதில் – நிச்சயமாகச் செய்யவேண்டும். நாம் அதனை இலக்காகக்கொண்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவிருக்கிறோம். ஆனால் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் உருவாவதற்கு அவர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தான் பிரதான காரணம். எனவே 2009 ஆம் ஆண்டின் பின்னர் அனைவரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது என்பதில் தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினையின் விளைவாகவே நான் இதனைப் பார்க்கிறேன். ஆனால் ஏதேனுமொரு விதத்தில் அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை நாம் முன்னெடுத்தேயாகவேண்டும்.
கேள்வி – சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக தமிழர்களுக்கு ஆதரவாக இயங்கிவரும் கனடாவின் எதிர்வருங்கால தமிழர்சார் அணுகுமுறை எவ்வாறானதான இருக்கப்போகிறது?
பதில் – உண்மையில் கனடா மனித உரிமைகளுக்கு வெகுவாக மதிப்பளிக்கின்ற, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அவசியமான ஆதரவை வழங்கத்தயாராக இருக்கின்ற ஒரு நாடாகும். ஈழத்துக்கு அடுத்ததாக ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் நாடாகவும் கனடா இருக்கிறது. எனவே கனடாவில் அரசியல் கட்சியொன்றின் தலைவராக வருவதற்குக்கூட எமது தமிழ்ச்சமூகத்தின் ஆதரவு தேவை எனும் நிலை காணப்படுகிறது. ஏனெனில் ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும், அங்குள்ள அரசியல் நீரோட்டத்துடன் தம்மை இணைத்து, அரசியல் ரீதியில் துடிப்புடன் செயற்படக்கூடிய ஒரு இனமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர், தாம் பதவிக்கு வந்தால் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு குறித்த விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை மேற்கொள்வதாக ஆங்காங்கே கூறியிருக்கிறார். ஆகவே கனடாவில் தமிழர்களுக்கு சாதகமான பல்வேறு நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. இருப்பினும் நம்மை நாம் மிகவேகமாகப் பலப்படுத்திக்கொண்டு, ஒன்றிணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே சாதகமான தீர்வை நோக்கிப் பயணிக்கமுடியும்.