எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளபோதும் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரசாரம், போராட்டம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தற்போதே கையில் எடுத்துவிட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. தி.மு.க. மட்டும்தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் அதுதான் எங்கள் குறிக்கோள்’ என்றார். இதனால், பா.ஜ.க.வுடன் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை, கோவையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி; பா.ஜ.க. நோட்டா கட்சி; பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். இன்று பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது’ என்றார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
பின்னர், மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும் எனும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தவம் கிடப்பதாக அண்ணாமலை பேசியது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அ.தி.மு.க.வை பற்றி அவர் (அண்ணாமலை) குறிப்பிட்டாரா? தவறாக பேசக்கூடாது. பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல. கூட்டணி குறித்து 6 மாதங்களுக்கு பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்று நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்சி தொடங்கியதுமுதல் இன்றுவரை எந்த கட்சியிடமும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரிந்திரம் கிடையாது’ என்றார்.