2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார். ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இவர்கள் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, ‘மூக்குத்தி அம்மன் 2’ படம், அரண்மனை-4 போல் ஒரு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
