மகாராஷ்டிரா மாநில ஆளுனர் சி.பி. ராதா கிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதை தான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்பட வில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை அனைத்துமே அரசிய லாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை, அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று. பீகார் மாநில மக்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஆனால் அவர்கள் மீது தமிழை திணிக்கமுடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ, . அதே போல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர். அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.