சாகித்ய அகாடமியின் வருடாந்திர இலக்கிய விழா டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை விழா நடக்கிறது. 2024-ம் ஆண்டுக்கு ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” என்ற ஆய்வுக் கட்டுரை நூலுக்காக எழுத்தாளர் இரா.வேங்கடாஜலபதி பெற்றார். இதற்கிடையே 2024-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்காக 21 மொழிகளுக்கு சாகித்ய அகாடமி விருதும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பேராசிரியை ப.விமலாவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் கேரளாவின் முன்னாள் பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா எழுதி இருந்த வாழ்க்கை சரிதை நூலான “எண்ட ஆண்கள்” என்கிற மலையாள நூலை தமிழில் “எனது ஆண்கள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார். இவரது சிறந்த மொழிபெயர்ப்புக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி இருக்கும் நெல்லை பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“‘எனது ஆண்கள்’ நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.