தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நோயாளி, மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகிலிருக்க வேண்டிய துணை என நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் மருத்துவம் என்கிறார் திருவள்ளுவர். ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவரே இல்லாத அவல நிலை நீடிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் ஆங்காங்கே ஏற்படுகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள செவிலியர்கள் மருத்துவம் பார்த்ததாகவும், சிறிது நேரம் கழித்து பனிக்குடம் உடைந்துவிட்டதாகக் கூறி கர்ப்பிணிப் பெண்ணை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே கர்ப்பிணிப் பெண்ணும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை நான் பல முறை அறிக்கைகள் வாயிலாக தி.மு.க. அரசுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன். அண்மையில், 07-11-2024 அன்று விடுத்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டியதோடு, குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் வெகு குறைவாக உள்ளனர் என்றும் தெரிவித்து இருந்தேன்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் மருத்துவர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று பேட்டி அளித்தார். ஆனால், கள நிலைமை என்பது வேறு மாதிரியாக உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் தற்போதும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும்; இதுபோன்ற அவல நிலையை அகற்றவும்; தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.