2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி தமிழக அரசு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி இன்று தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடையும். இந்த 2-ம் பகுதியில், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழக மசோதா 2025-ஐ மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கும் என மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த கோரி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.