இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சூழலில், முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், காசா முனை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடந்து உள்ளது.
