பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக பலூசிஸ்தான் உள்ளது. எனினும், பல வருடங்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறோம் என குற்றச்சாட்டாக கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாகின்றனர். பலர் படுகொலை செய்யப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பலூச் விடுதலை ராணுவம் என்ற பெயரிலான அமைப்பு கடத்தி உள்ளது. அந்த ரெயிலில் இருந்த 182 பயணிகளையும் சிறை பிடித்து வைத்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் சிறை பிடித்ததும், 182 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறோம்.
கடந்த 15 மணிநேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, கூடுதலாக 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், எதிரிகளின் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. எனினும், போராளிகள் தரப்பில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.