மதுபான நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.
அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. டில்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள். மதுபானத்தில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ? அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். மதுபான ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.