பு.கஜிந்தன்
கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில் – வடக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது
வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில்
கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யாழ். ஊடக அமையத்தில் 16ம் திகதி அன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின்
சிரேஸ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில்,
யாழ். குடாநாட்டு இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில்துறை குறித்த எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாநாடு மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் முதலாம் நாளன்று கனடா மற்றும் பிற சந்தைகளுக்கு இலங்கை மாணவர்களை பணிக்கமர்த்தல், இலங்கையில் கனேடிய கல்வியை வழங்கல், தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நிறுவுதல், கனடா கல்வி மற்றும் திதன் பயிற்சி உரிமையாளர்களை ஊக்குவித்தல், திறன் இடப்பெயர்வு மத்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.
அதேநேரம் யாழ் வேலைவாய்ப்பு வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் யாழ் வேலை வாய்ப்பும் தொழிலாளர்களுக்கான சாதக நிலைகளை உருவாக்கல்.
இளைஞர்களுக்கு வேலவாய்ப்பு வழங்கல், பல நூறு படித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கானஎதிர்கால திட்டங்கள் முதலீடுகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளது.
குறிப்பாக காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிக்கு உருவாக்கப்பட இருக்கும் முதலீட்டு வலயங்களில் இத்தகைய வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் இணைந்த கட்டமைப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எமது இந்த நிகழ்வுக்கு இலங்கையின் பிரதமர் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றார்.
வலம்புரி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினூடாக கனடாவிலிருந்து முதலீடுகளை குறிப்பாக வடபகுதிக்கு கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அதுமட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்று வெளினஷநாடுகளில் கற்று மீளவும் வரும் மாணவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைகளும் ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
அந்தவகையில் இந்த வாய்ப்பை வடக்கின் இளைஞர் யுவதிகள் சரியாக பயன்படுத்தி வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.