சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு: விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்சுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.