இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார். இந்நிலையில், லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்; சிவகுமார் உடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
