ந.லோகதயாளன்.
தலைமன்னார் இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக ரூ.6.43 கோடி ரூபா ( இந்திய நாணயம்) செலவில் புதிய இறங்குதுறைஅமைக்கும் ஆரம்ப பணிகள் இந்தியத் தரப்பில் நடைபெற்று வருகிறது.
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கான கப்பல் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல் போக்குவரத்து 1964ல் வீசிய கோரப்புயலின்போது தனுஷ்கோடி நிலைகுலைந்ததால் நிறுத்தப்பட்டது. இதன் பின்பும் மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து இலங்கை உள்நாட்டு போர் காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டது.
இவ்வாறு நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் வகையில் இரு நாடுகளும் பவ்வேறு முயற்சிகள் மேற்கொண்டு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ல் நாகைபட்டினம் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்திற்கு இந்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக இந்தியத் தரப்பில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர் மா.வள்ளலாளர் ஐ.ஏ.எஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான இடமாக இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்திருந்தனர்.
இவற்றின் அடிப்படையிலேயே இறங்குதுறை பாலம் அமைப்பதற்கு கடலுக்குள் மணல் ஆய்வும் மேற்கொண்டனர்.
தற்போது அவை நிறைவுபெற்று தலைமன்னார் ராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ப புதிய இறங்குதுறை ஒன்றை அமைக்க 6.43 கோடி ரூபா இந்திய நாணயத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே அமையவுள்ள T வடிவிலான புதிய இறங்குதுறை 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது எனவும் இதன் முதல் கட்ட பணியாக கடலுக்குள் இயந்திரங்களை நிறுத்த தேவையான நகர்வு மேடை அமைக்க மேடைக்கான பாகங்கள் பொருத்தும் பணி ஓலைக்குடா பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இம்மாத இறுதிக்குள் பாகங்கள் முழுமையாக பொருத்துபட்டு அனைத்தும் அக்னி தீர்த்த கடற்கரை புதிய கப்பல் இறங்குதுறை கட்டும் இடத்தில் இறக்கப்படும். அதை தொடர்ந்து கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணியை தொடர்ந்து இறங்குதுறைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இறங்குறைக்கான பணிகள் இயற்கையின் கால நிலைக்கு ஏற்றவாறு நடைபெறும் என்பதால் இந்த ஆண்டின் இறுதியிலேயே இவை நிறைவு பெற வாய்ப்புள்ளதாகவும் இந்தியப் பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை வரும்போது தலைமன்னார் இராமேஸ்வரம் பயணிகள் போக்கு வரத்து தொடர்பிலும் உரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது