”ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ,இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் இருண்டு போயுள்ளன.பட்டலந்தை அறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் போது ஒவ்வொரு கட்சியினரும் மற்றையவர்கள் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தப் போகின்றனர். இதனால் இந்த ”பட்டலந்த அறிக்கை” சிங்கள ஆட்சியாளர்களினதும் ஜே .வி.பி.யினரினதும் படைகளினதும் கொடூர முகத்தை மீண்டும் ஒருதடவை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகின்றது”
கே.பாலா
ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில் இளைஞர் விவகார, தொழில்வாய்ப்புக்கள் அமைச்சராகவும் பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் ஜே .வி.பி. யினரின் (மக்கள் விடுதலை முன்னணியின்) ஆயுதக்கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென நடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் ”பட்டலந்த வதை முகாம்” தொடர்பான ”பட்டலந்த அறிக்கை ”இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பையும் பதற்றத்தையும் பரிதவிப்புக்களையும் சிங்களக் கட்சிகளிடையில் கலக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உரத்தொழிற்சாலை ஒன்று உள்ள பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது . இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்படுவதை இந்த வதை முகாமின் சூத்திரதாரியெனக் குற்றம்சாட்டப்படும் அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்க ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன .
இவ்வாறான நிலையில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து 1988, 1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்த உரத்தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத்தொகுதியில் நடத்திச்செல்லப்பட்ட வதைமுகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின .சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர்.
இவ்வாறு சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வீடுகள் அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் நேரடி பொறுப்பிலேயே இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. வீட்டுத் தொகுதியின் A2/2 வீட்டை 1983 முதல் 1989 வரை ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சின் சுற்றுலா பங்களாவாக பயன்படுத்தியிருந்தார்.பின்னர் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை அதேவீட்டை கைத்தொழில் அமைச்சரான தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்தினார்.A2/1 வீடு ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததுடன் A2/3 வீடு ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
A1/7 வீட்டையும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தியிருந்ததுடன் B2 வீட்டையும் ரணில் விக்கிரமசிங்க தமது அலுவலகமாக பயன்படுத்தியிருந்தார்.இந்த வீட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தப்பிச் சென்ற ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் இந்த வீட்டை அடையாளம் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதுB1 வீடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் பயன்படுத்தப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுதாத் சந்திரசேகர B7 வீட்டை பயன்படுத்தியிருந்ததாக பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
B8 வீடு குறித்த வீட்டிற்கு அருகில் அமைந்திருந்ததுடன் அதனை பொலிஸ் அத்தியக்சகர் டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தியிருந்தனர். குறித்த வீட்டில் தடுத்து வைக்கப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏல் சுகி பெரேரா என்பவர் பட்டலந்த விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.இதனைத் தவிர உரிய நடைமுறைக்கு புறம்பாக அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் பிரிவொன்றுக்காக மேலும் சில வீடுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழு வினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார், ஆனால் அந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் .பட்டலந்த வதைமுகாம் சித்திரவதைகள், படுகொலைகளை ,அதுதொடர் பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் நாடும் மறந்து விட்டனர் .
இவ்வாறான நிலையில்தான் கடந்த 06-03–2025 அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் பட்டலந்த வதைமுகாம் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படுபவருமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில் ஜே .வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும் மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன் அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாகவிருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாகவுள்ளவர்களுமான ஜே .வி.பி. யினர் .அந்த பட்டலந்தை வதைமுகாம் தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் தூசு தட்டி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும் அறிவித்துள்ளனர்
அதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 16 ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டுவசதி வழங்குவது எனக்குச் சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.
ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள் எதுவும் எனக்குப் பொருந்தாது. 1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்குப் பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த பட்டலந்த வதை முகாம் செயற்பட்ட காலத்தில் ஜனாதிபதியாகவிருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச. ஜே .வி.பி.யினரை ஈவிரக்கமின்று கொன்று ஆறுகளில் வீசியதில் பிரசித்தமானவர். பட்டலந்த வதைமுகாமை நடத்தியவர் அப்போதைய அமைச்சரும் தற்போதைய ஐக்கியதேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே .வி.பி.யினர். பட்டலந்த அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே .வி.பி.யினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறானநிலையில்தான் பட்டலந்த வதைமுகாம் பற்றிய பட்டலந்த அறிக்கையை ஆட்சியாளர்களான ஜே .வி.பி. யினர் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன் அதில் சம்பந்தப்பட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக்கூறியுள்ளதுடன் பட்டலந்த வதைமுகாம் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த இரு நாட்களை ஒதுக்கியுள்ளதுடன் அதில் முதல் நாளை ஏப்ரல் 10 ஆம் திகதி எனவும் அறிவித்துள்ளனர் .ஆக பட்டலந்த வதைமுகாமுடன் மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான படுகொலைகளுடன் தொடர்புபட்ட அனைத்துப் புள்ளிகளும் தற்போது பாராளுமன்றம் என்ற ஓரிடத்தில் சந்தித்துள்ள நிலையில் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகளைப் பற்றி மட்டுமல்லாது இன்னும் பல படுகொலைகளும் வெளிச்சத்திற்கு வரப்போகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ,பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் புபுது ஜெயகொட கூறியுள்ளார்.பட்டலந்தவில் கொன்ற ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை விஜய வித்யாலயாவில் நடந்த கூட்டுப் புதைகுழிக்கு பொறுப்பானவரும், அப்போது மாத்தளை இராணுவத்தின் தளபதியாக இருந்தவருமான கோத்தபாய ராஜபக்சவையும் கைது செய்யவேண்டும் எனக்கூறியுள்ளார்.
சிறீலங்கா மஹஜன கட்சியின் ஸ்தாபகரும், பிரபல நடிகரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவருமான விஜேயகுமாரதுங்கவின் படுகொலை குறித்த அறிக்கையும் பட்டலந்தஅறிக்கைபோன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சாமர சம்பத் தசநாயக்க எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையுடன் மேலும் சில ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும். 1989 காலக்கட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் 16 பேரும், கட்சி ஆதரவாளர்கள் 630 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் .சுதந்திரக் கட்சியின் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இந்தக் கொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரேமதாச யுகத்தை நினைவு கூர்வதாக இருந்தால், கண்டி மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது . பட்டலந்த வதை முகாமிற்கும் சென்றவர்கள் இன்றும் இத் தொகுதியில் இருக்கின்றார்கள். 22 பல்கலைக்கழக மருத்துவ பீடமாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 157 பேரை கண்டி மஹவத்த பகுதியில் படுகொலை செய்தார்கள். இதில் பிரேமதாச அரசாங்கத்தினால் 127 பேர் கொல்லப்பட்டனர். 28 பேரை ஜே.வி.பி கொலை செய்தது. கடுகண்ணாவ மற்றும் ரந்தெனிகலவில் வதைமுகாம் கள் இருந்தன. அஸ்கிரிய பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்திலும் ஒரு வதை முகாம் காணப்பட்டது. குண்டசாலை , கடுகஸ்தோட்ட தெல்வத்த உள்ளிட்ட பல வதை முகாம்கள் இம்மாவட்டத்தில் காணப்பட்டன. 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மகாவலி கங்கையில் கொலை செய்து வீசப்பட்டமையும் மறந்துவிட முடியாது. இதுவே 88, 89 வரலாறு என்று 2020 ஆம் ஆண்டு ஒரு பிரசார மேடையில் அப்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும் தற்போதய எம்.பி.யுமான தயாசிறி ஜயசேகர ,பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இப்போது கதைக்கும் ஜே .வி.பி.யினர் கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்துள்ளார்கள் அப்போது அதுபற்றி கதைக்கவில்லை. அத்துடன் தற்போது இவர்கள் சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்கவுடனேயே 2015இல் அரசாங்கத்தை அமைத்தார்கள். அப்படியிருக்கும்போது ஏன் இவர்கள் பட்டலந்த அறிக்கையை பாராளுமனறத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென அந்த அரசுகளை வலியுறுத்தவில்லை?ஆகவே தற்போது ஜே .வி.பி.யினர் பட்டலந்த தொடர்பில் பேசுவது ,பட்டலந்த அறிக்கையை சபையில் சமர்ப் பித்துள்ளமை அரசியலுக்காகவா? அப்படியில்லையெனில் பட்டலந்தவில் மட்டுமல்ல 46 இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருந்துள்ளன. அவை தொடர்பிலும் ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டும்,அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே நாட்டை ஆட்சி செய்த அரசுகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், ஜே .வி.பி. யினர் செய்த படுகொலைகள் எல்லாமே இனி மீண்டும் கிளறப்படப்போகின்றன. பட்டலந்தை அறிக்கைதொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் போது ஒவ்வொரு கட்சியினரும் மற்றையவர்கள் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தப்போகின்றனர். இதில் தற்போதய ஆட்சியாளர்களான ஜே .வி.பி. யினர் செய்த படுகொலைகள் அம்பலத்துக்கு வரும்போது ஆட்சியாளர்களாக அவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இதனால் பட்டலந்த அறிக்கையை அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது விட்டோமோ என ஜே .வி.யி.னர் கையை பிசைய ஆரம்பித்துள்ளனர். அதனால் தான் வீராப்பு பேசி விட்டோம், புலி வாலைப் பிடித்துவிட்டோம் இனி அதனை விட்டால் தமக்கு ஆபத்து என்பதனால்தான் ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரு நாள் விவாதத்தைநடத்தி விட்டு அடுத்த நாள் விவாதம் மே மாதத்தில் என திகதி குறிப்பிடாது ஒத்திவைத்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் வரை இருண்டுபோயுள்ளன.பட்டலந்தவில் சித்திரவதைப்பட்டது , படுகொலைசெய்யப்பட்டது நம்மவர்கள்தானே.அதனால் இந்த அறிக்கையை அம்பலப்படுத்துவதன் மூலம் மக்களின் அனுதாபத்தையம் அரசியல் இலாபத்தையும் பெறலாம் என ஜே .வி.பி.யினர் தப்புக்கணக்குபோட்டுவிட்டனர். அல்ஜசீரா தொலைக்காட்சி காட்டிய குளவிக்கூட்டை அரசியல் தந்திரம் தெரியாது ஜே .வி.பி.யினர் கலைத்து விட்டதனால் இன்று அவர்கள் உட்பட பிரதான சிங்களக்கட்சிகள் வரை தங்களின் கோர முகம் வெளிப்படப்போகின்றதேயென கலங்கிப்போயுள்ளன.
அதேவேளை பட்டலந்த அறிக்கை விவாதத்திற்கு வரும்போது தமிழர் தரப்புக்கள் பேரினவாத அரசுகளின் தமிழினப் படுகொலைகளையும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளையும் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களையும் படைகளினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் பட்டியலிட்டு மீண்டும் உரத்துக் குரலெழுப்பப் போகின்றனர். எனவே இந்த ”பட்டலந்த அறிக்கை” சிங்கள ஆட்சியாளர்களினதும் ஜே .வி.பி.யினரினதும் இலங்கைப்படைகளினதும் கொடூர முகத்தை மீண்டும் ஒருதடவை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகின்றது