சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “கோவை வடக்கு தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படுமா” என்று அம்மன் கே.அர்ஜுனன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்று கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு குளுமையான பதிலை தருகிறேன். எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருதமலை கோவிலில் ரூ.37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மருதமலை கோவிலில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 547 சிவ திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது” என்றார். மேலும், சூலூர் தொகுதியில் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கபடுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சூலூர் தொகுதியில் மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு ரூ.1 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டும் பணி 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும், உறுதியாக 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வைத்தியநாதர் கோவில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதம் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.