விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புவியீர்ப்பு விசை, சூழல் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவர்களின் உடல்நிலை பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை 45 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமுடன் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதுபற்றி நாசா அதிகாரிகள் கூறுகையில், ‘சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் நீண்ட நாட்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்களது எலும்புகள், தசைகள் வலுவிழந்து உள்ளன. அதனால் அவர்களால் இயல்பாக நடக்க முடியாது.
அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும். விரைவில் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். அதுவரை அவர்கள் ஹூஸ்டனில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி இருப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திப்பார்கள்’ என்றனர். இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்சின் உடல்நிலை, பூமிக்கு ஏற்ற இயல்புக்கு திரும்ப, சில காலம் ஆகும் என குறிப்பிட்டார். எனவே, சுனிதா மற்றும் வில்மோர் உடல்நலம் அடைந்த பிறகு, வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறினார்.