சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என மேயர் பிரியா கூறினார்.
சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த பட்ஜெட் மீதான விவாதம் எழுந்தது. இந்த விவாதத்தில் பா.ஜ.க. மாமன்ற உறுப்பினர் பேசும் போது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் என்பது நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக இருக்கிறது என்று பேசினார். குறிப்பாக சொத்து வரி உள்ளிட்ட வரிகள் நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக காணப்படுகிறது என்று அவர் பேசினார்,. இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதில் அளித்தார். அவர், மத்திய அரசு சார்பில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே சென்னைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என மத்திய அரசு தொடர்ந்து கூறிவருவதாகவும் சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என்று கூறினார், இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறையான ஒரு பட்ஜெட்டை அமைப்பதற்கான சூழல் இருக்கிறது எனவும் தொடர்ந்து மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வில்லை என்றும் உங்கள் கட்சி சார்பாக நீங்களே அதனை பெற்று தருமாறும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த மாமன்ற கூட்டத்தில் பதில் அளித்தார்.