7 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 17 ஆயிரம் கோவில்களுக்கான வைப்பு நிதியினை தலா ரூ.2.50 லட்சமாக உயர்த்திட ரூ.85 கோடி மற்றும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதலாக 1,000 கோவில்களுக்கு ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 கோடி என மொத்தம் ரூ.110 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் தலைமை நிதி அலுவலர் பி.ஜமிலாவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட1,000 ஒருகால பூஜைத் திட்ட கோவில்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களிடம் ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி அளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ளது.