தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரகுவரன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘யாரடி நீ மோகனி’. ‘முதல்வன்’, ‘பாட்ஷா’, ‘ரட்சகன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரகுவரனின் அழுத்தமான நடிப்புக்குச் சான்று. ‘பாட்ஷா’ படத்தில் ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 1996ம் ஆண்டு நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகர் ரகுவரன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் 2008-ல் காலமானார். ரகுவரன் மறைந்து 18 ஆண்டுகளாகும் நிலையில், அவரது திரைப்பயணம், வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இதன் போஸ்டரை ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகிணி வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. ரகுவரன் மகன் ரிஷி இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அதிக மொழியில் இவர் ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய தந்தை பெயரில் இவர் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ரகுவரனுக்கு சினிமாவின் நுழைந்த ஆரம்ப காலத்தில் இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர் நடிப்பு தேர்வு செய்திருந்தார். அவருடைய மகன் ரிஷி தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.
