மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இந்த மனு, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி எலேனா காகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தன்னை நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூர் ராணா தாக்கல் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புதுப்பிக்கப்பட்ட மனுவில், இந்த வழக்கை நீதிபதி ராபர்ட்ஸ் விசாரிக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
