கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு. இவரது மனைவி சரிதா (வயது 48). இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்தார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகரில் வசித்து வந்தனர். இதனிடையே, சரிதாவுக்கும் அவரது கணவர் பிரகாஜ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்குபின் எதின் ராமராஜு தனது தந்தையான பிரகாஷ் ராஜு உடன் கலிபோர்னியாவில் வசித்து வந்தான். அதேவேளை, சரிதா வெர்ஜினியா மாகாணம் பேர்பெக்ஸ் நகரில் வசித்து வந்தார். மேலும், நீதிமன்ற அனுமதியுடன் அவ்வப்போது மகனை தன்னுடன் அழைத்து சென்று சில நாட்கள் தனது வீட்டில் வளர்த்து வந்தார். பின்னர், அனுமதி காலம் முடிந்த உடன் மீண்டும் பிரகாஷ் ராஜுவிடம் மகனை விட்டுவிடுவார். மகன் யார் பொறுப்பில் இருப்பது என்பதில் பிரகாஷ் ராஜுவுக்கும், சரிதாவுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. மகனின் மருத்துவம், கல்வி தொடர்பான விஷயங்களில் தன்னை கேட்காமல் பிரகாஷ் முடிவெடிப்பதாகவும், மேலும் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாகவும் சரிதா குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரகாஷ் மறுத்துள்ளார். இந்நிலையில், மகனை தன்னுடன் 3 நாட்கள் வைத்துக்கொள்ள நீதிமன்றத்தில் சரிதா அனுமதி பெற்றுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி சரிதா தனது மகன் எதின் ராமராஜுவை பேர்பெக்ஸ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்பின், மகனை டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், 18ம் தேதி சாண்டா அனா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மகனுடன் அறை எடுத்து சரிதா தங்கியுள்ளார். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்ததால் மகனை மறுநாள் (19 ம் தேதி) முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. கணவருடனான பிரச்சினை, மகனை மீண்டும் பிரிந்து இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் ஆத்திரமடைந்த சரிதா அங்கிருந்த கத்தியை கொண்டு மகன் எதின் ராமராஜுவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் எதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
பின்னர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட சரிதா தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேவேளை, தூக்கு மாத்திரைகளை உட்கொண்ட பின் காவல்துறைக்கு போன் செய்த சரிதா, மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த ஓட்டலில் எதின் ராமராஜு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான். சிறுவனின் உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடதில் மயங்கிய நிலையில் கிடந்த சரிதாவை மீட்ட காவல்துறை சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் குணமடைந்த சரிதா கைது செய்யப்பட்டுள்ளார்.