நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை நித்யாமேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் சமீபத்திய பேட்டியில் இன்னும் 10 நாட்களுக்குள் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் விளக்கம் தந்தார். அதே போல், தனுஷ் இயக்கத்தில் அஜித்தை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறினார்.
