தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் விக்ரம் பேசுகையில், ‘மலையாளத்தில் சாதனை படைக்கும் முதல் பான் இந்திய திரைப்படமாக ‘எல்2 எம்புரான்’ இருக்கும் என நம்புகிறேன். வீரதீரசூரனும் அதனுடன் திரைக்கு வருவது மகிழ்ச்சி. நடிகர் பிருத்விராஜ், தனுஷைபோல இயக்குனராக மாறி ‘லூசிபர்’கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது’ என்றார். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் லூசிபர். பிருத்விராஜ் இயக்கிய முதல் படம் இதுவாகும். தற்போது இதன் 2-ம் பாகமாக எல்2 எம்புரான் உருவாகியுள்ளது. இப்படமும் வருகிற 27-ம் தேதி வெளியாகிறது.
