சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தை குறிவைத்து துணை ராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
