தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். அதன்பின் வரிசையாக பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இதற்கிடையே ‘நான்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ரோமியோ’, ‘மழைபிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ககன மார்கன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே, அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ‘சக்தித் திருமகன்’. இந்தப் படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்க உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதை அடுத்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘ஜென்டில்வுமன்’ பட இயக்குநர் ஜோசுவா சேதுராமனுடன் விஜய் ஆண்டனி இணைந்து பணியாற்ற உள்ளார். விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
