சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மும்பையை சேர்ந்த பி4யு என்ற நிறுவனம், வீர தீர சூரன் 2 படத்தின் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் டில்லி உயர்நீதிமன்றம் படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அதாவது, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பி4யு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார். ஆனால் படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதால் படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், “வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் வெளியீடு தேதியை வெளியிட்டதால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்” என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால கடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ திரைப்படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.