அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருக்கவே தகுதியற்றவர். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமில்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான். அ.தி.மு.க.வை ஒருபோதும் எதிரிகளிடம் அடமானம் வைக்கமாட்டோம். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. நாங்கள் ஆளுங்கட்சி அல்ல. ஆட்சியில் இல்லாதபோது உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.