யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்தியாவிலிருந்து வெளி வரும் “இந்து” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்தில் அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தாங்கள் தயாரித்த “எக்கிய ராஜ்ய” என்கிற இடைக்கால வரைவை மீண்டும் மேசைக்கு எடுப்பதைத் தடுப்பது என்றால் தமிழ்த் தரப்பு ஐக்கியப்படுவது தவிர்க்க முடியாது.
அதே சமயம் யாப்பை நோக்கி மட்டும் தமிழ்த் தரப்பு ஐக்கியப் படக்கூடாது,மாறாக தேர்தல்களை நோக்கியும் சமோசிதமான தந்திரோபாயமான கூட்டுக்களுக்குப் போக வேண்டும். அல்லது குறைந்த பட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளுக்காவது போக வேண்டும் என்பதனை நான் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன்.
அதற்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டு விளக்கம் உண்டு. தேர்தல் கூட்டுகள் பெரும்பாலும் தந்திரோபாயமானவை. ஆனாலும் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக தங்களை பலப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தால், தேர்தலுக்கும் அங்கே ஒரு பங்கு உண்டு. தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகத் தோற்கும் பொழுது பின்னர் நாடாளுமன்றத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பு பலமாக நின்று பேச முடியாது. எனவே ஒரு தரப்பாக தமிழ் மக்களைப் பலப்படுத்துவது என்று பார்த்தால் அது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்று எல்லாத் தேர்தல் களங்களிலும் தமிழ் தரப்பை ஆகக்குறைந்த பட்சம் தந்திரோபாய நோக்கத்தோடாவது ஒருங்கிணைக்க வேண்டும்.
ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாய கூட்டுக்களுக்குத் தயாராக இல்லை. அவர்கள் கொள்கை வழிக் கூட்டுக்களுக்கே தயாராக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள்.
கடைசியாக இயங்கிய உள்ளூராட்சி சபைகளின் கடைசி கட்டத்தில் காரைநகரில் ஒரு பிரச்சினை வந்தது. அங்குள்ள சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்பியது. அது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நான் உரையாடினேன். அவர்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி குறிப்பிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். அதே சமயம் அந்த உரையாடலின் போது, செல்வராசா கஜேந்திரன் என்னிடம் சொன்னார், “அண்ண இது போன்ற விடயங்களில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் செய்வோம். ஆனால் ஐக்கியத்தைப் பற்றி மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று.
அந்தளவுக்கு அவர்களுக்கு ஐக்கியம் அலர்ஜிக்காக இருந்தது. இருக்கலாம். அரங்கில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத சக்திகளே அதிகமாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், ஒரு தரப்பாக தமிழ் மக்களை பலப்படுத்துவது என்று சொன்னால் அதனை தந்திரோபாயமாகத்தான் செய்யலாம். அதுவும் தேர்தல் வழியில் தந்திரங்கள்தான் அதிகம்.
நான் திரும்பத் திரும்பக் கூறும் ஒரு உதாரணத்தைத்தான் இங்கேயும் சொல்லலாம். சுத்தமான தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. தங்கத்தில் நகை செய்ய வேண்டுமானால் குறிப்பிடத்தக்க அளவுக்கு செப்பைக் கலக்க வேண்டும் வேண்டும். இந்த பூமியிலே பெரும்பாலான விடயங்கள் அப்படித்தான். அதிலும் அரசியலில், குறிப்பாக தேசியவாத அரசியலில், அதுதான் நடைமுறைச் சாத்தியமானது.
அரசியலில் புதுமையானது, முழுமையானது, புனிதமானது, சரியானது, பிழையானது…போன்ற அனைத்துமே சார்புக் கணியங்கள்தான். ஒப்பீட்டு முடிவுகள்தான். நடைமுறை வாழ்வில் முழுப் புனிதமானது எதுவும் இல்லை. முழுத் தூய்மையானது எதுவும் இல்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது உருவாக்கியிருக்கும் கூட்டில் இருப்பவர்களில் அநேகர் முன்பு வெவ்வேறு கூட்டுக்களில் இருந்தவர்கள்; வெவ்வேறு தரப்புகளோடு சேர்ந்து உழைத்தவர்கள். இறந்த காலத்தைக் கிண்டினால் யாருமே புனிதரில்லை. ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தான்.கஜேந்திரக்குமாரின் தகப்பனார் குமார் பொன்னம்பலம் இந்திய –இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் 1980களின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தின் பாதுகாப்புக்கு புளட், டெலோ ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற தமது அனுபவத்தை ஏற்கனவே சிவாஜிலிங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். புளொட் இயக்கத்தின் சிவநேசனும் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அதற்காக பின்னாளில் குமார் சிந்திய இரத்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் அரசியல்.
ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாயமாகக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.கொள்கை வழிக் கூட்டுக்கே தங்கள் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றது .தங்கள் கொள்கையில் வழுக்காதவர்கள் என்று கூறுவதன் மூலம் மற்றவர்களை கொள்கைகளில் வழுக்கியவர்கள் என்று முத்திரை குத்தி வந்தது. அதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் தாங்கள் முன்வைக்கும் இலட்சியத்தை நோக்கி அவர்களுடைய சொந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை ; தமிழ் மக்களையும் கட்டி எழுப்ப முடியவில்லை.
இப்பொழுது யாப்புருவாக்க முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் ஒன்று சேர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவையை செயல்படாத நிலைக்கு தள்ளியதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவையை அதன் அடுத்த கட்டக் கூர்ப்புக்குக் கொண்டு போய் இருந்திருக்கலாம். பேரவை என்ற தாயின் முடிவுக்குக் காரணமாக இருந்து கொண்டு அந்தத் தாய் ஈன்ற பிள்ளையாகிய முன்மொழிவை இப்பொழுது காவுகின்றார்கள்.
அப்படித்தான் பொது வேட்பாளரின் விடயத்திலும் முன்னணி அந்த கூட்டுக்குள் இணைந்து இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே பொது வேட்பாளரை முன்னணி எதிர்த்தது. மட்டுமல்ல, பொது வேட்பாளருக்கு ஆதரவானவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறினார்கள். பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் சந்திப்புகளின்போது குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி கஜேந்திரன் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்று எங்களுக்குத் தெரியும். அதை நன்கு தெரிந்து கொண்டுதான் உங்களை எதிர்க்கிறோம்” என்று.
ஆனால் பொது வேட்பாளருக்கு முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளின் பின் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை கஜேந்திரக்குமார் தமிழ்த் தேசியத் தன்மை மிக்க வாக்குகள் என்று கூறினார். அதெப்படி வெளிநாட்டின் ஏஜென்ட்கள் தமிழ் தேசிய தன்மைமிக்க வாக்குகளைத் திரட்டலாம்? கெட்ட கூட்டு எப்படி நல்ல விளைவைத் தரும் ?
தமிழ் மக்கள் பேரவையின் சிதைவுக்குக் காரணமாக இருந்த ஒரு தரப்பு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் அதே பேரவையின் முன் மொழிவை கையில்
எடுத்திருப்பது எதை காட்டுகின்றது? ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றது என்பதைத்தானே? பொது வேட்பாளரைத் தவறு என்று கூறிவிட்டு அவர் பெற்ற வாக்குகளை தேசியத் தன்மை மிக்கவை என்று கூறுவது எதை காட்டுகின்றது? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்பதைத்தானே? பொது வேட்பாளருக்காக முன்னணியில் நின்று உழைத்த ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் கூறுவதுபோல “முன்னணியானது சரியான வேளைகளில் பிழையான முடிவை எடுக்கிறது. பிழையான வேளைகளில் சரியான முடிவை எடுக்கின்றது” என்பது சரியா ?
ஆனால் இப்பொழுது முன்னணி எடுத்திருக்கும் முடிவானது சரியான வேளையில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றுதான் தோன்றுகிறது. கடந்த 15 ஆண்டுகால அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்குமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும்.
ஒப்பீட்டளவில் பெரிய கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டும். ஒப்பீட்டளவில் யார் தேசத்தைத் திரட்டும் நம்பிக்கைகளை பலப்படுத்துகின்றார்களோ, அந்த நம்பிக்கைகளுக்காக உண்மையாக உழைக்கின்றார்களோ, அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும். பொது வேட்பாளருக்கு பின் மீண்டும் ஒப்பிட்டளவில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அது பிசகலாம் பிசகாமல் விடலாம். ஆனால் தேசமாகத் திரளவில்லை என்றால் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்குப் பின் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக, ஒரு தேசமாக மேலும் மெலிந்து போய் விடுவார்கள்.