கதிரோட்டம் -28-03-2025
இலங்கை அரசின் கீழ் இயங்கிவந்த காவல்துறையானது யாழ்ப்பாண மண்ணில் செயற்படாமல் இருந்த காலப்பகுதியில் அன்றைய வாகனச் சாரதிகள் தண்டனைகளுக்குப் பயந்த வண்ணமே வாகனங்களை வீதிகளில் செலுத்திச் சென்றார்கள். விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் தமிழீழ காவல்துறையானது இயங்கியபோது கிளிநொச்சி பரந்தன் இயக்கச்சி போன்ற பகுதிகளில் காணப்பட்ட சாரதிகளுக்கான எச்சரிக்கை அறிவித்தல்களை அவர்கள் கவனமாகப் படித்து அதன் பிரகாரம் வாகனங்களைச் செலுத்தினார்கள்.
குறிப்பாக. பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பெண்கள் போன்றவர்கள், சாரதிகளின் முறையற்ற வாகனம் செலுத்துதலினால் பாதிக்கப்படக் கூடாது என்பதை சாரதிகளே கவனித்து செயற்பட்டார்கள்.
ஆனால் இன்றைய நாட்கள் விடிகின்றன பின்னர் இருள் வந்து சூழ்ந்து கொள்கின்றது அந்த நாள் கழிகின்றது. ஆனால் அன்றைய நாளில் எத்தனை உயிர்கள் தமிழர் பிரதேசங்களில் வாகன விபத்துக்களில் பறிபோகின்றன என்ற விபரங்கள் வைத்தியசாலைகளிலும் பொலிஸ் நிலையங்களிலும் கணக்கிடப்படுகின்றன. இவற்றை மின்னூடங்கள் உடனடியாக உலகெங்கும் பரப்பிவிடுகின்றன. ஆனால் விபத்துக்கள் சம்பவித்த காரணத்தால் தங்கள் உறவுகளை இழந்த வீடுகள் என்னென்ன காட்சிகள் இடம்பெறுகின்றன என்பதை அறிய செய்திகளைப் படிக்கும் எத்தனை பேர் அக்கறை கொள்கின்றார்கள் என்பதுதான் கேள்வி.
அந்தந்த வீடுகளில் ‘ஒப்பாரி’ கேட்கின்றது. தமது தந்தையையோ அன்றி தாயையோ அன்றி மாமாவையோ இழந்து தவிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கப் போகின்றதோ என்று அங்கலாய்க்க ஆரம்பிக்கின்றார்கள்.
ஆனால் அந்த நேரத்தில். விபத்துக்களுக்கு காரணமான சாரதிகளை ‘தப்ப வைப்பதற்கு’ பொலிஸ் நிலையங்களிலும் வைத்தியசாலைகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும் ‘பேரங்கள்’ பேசப்படுகின்றன. எங்கள் மண்ணிலிருந்து செய்தியையும் ஒளிப்படங்களையும் பார்க்கும் போது நூற்றுக்கு எண்பது வீதமான சாரதிகள் மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துவதாலேயே விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவிகள் தங்கள் உயிர்களை இழந்து தங்கள் உறவுகளையும் தவிக்க விட்டுச் செலகின்றார்கள் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
எமது மண்ணில் எத்தனையோ அரச அலுவலகங்கள் மக்களுக்காக இயங்குகின்றன. அங்கு கற்றவர்களும் பட்டதாரிகளும் அரசாங்கம் வழங்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணிசெய்கின்றார்கள். அவர்களில் சிலராவது இந்த வாகன விபத்துக்கள் இடம்பெறாது தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டாமா?
வட மாகணத்திற்குரிய ஆளுனரும் அங்கு உள்ள ஐந்து அரசாங்க அதிபர்களும் இந்த ‘உயிர்காக்கும் பணியின்’ பக்கம் தங்கள் பர்ரவைகளைச் செலுத்த மாட்டார்களா என்ற கேள்வியோடு இவ்வாரக் கதிரோட்டத்தை நிறைவு செய்கின்றோம்.!