இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் விரைவாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக 30-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது.
இதன்படி, ஆபத்தான நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து கடற்படைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அடிப்படை முதலுதவிகளை வழங்கிய கடற்படையினர் (2025 மார்ச் 30) அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்தற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.