– ஐங்கரன் விக்கினேஸ்வரா
சிட்னியில் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவள விழா இம்மாதம் மார்ச் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள் மாணவரான பேராசிரியர் ஆசி. கந்தராஜா, தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பினை கௌரவிக்கும் முகமாக சிட்னித் தமிழ் இலைக்கிய ஆர்வலர்கள் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வாண்டு தனது பவளவிழாவை கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு சிட்னியில் பிளாக்டவுண் உயர்தர ஆண்கள் பாடசாலை வளாகத்தில் பெருந்திரளான தமிழ் இலைக்கிய ஆர்வலர்களால் கௌரவிப்பு விழா சிறப்புற நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வினை தமிழ் இலக்கிய ஆர்வலரான திரு. திருநந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் திருமதி. சௌந்தரி கணேசன், திரு. நரேன் நரேந்திரநாதன், திரு. நாகேந்திரம், சட்டத்தரணி செ. ரவீந்திரன், திருமதி. இந்துமதி சிறிநிவாசன், பேராசிரியர் பிரவீணன் மகேந்திரன், டாக்டர் வாசுகி சித்ரநேசன் மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.
புகலிட தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் பாடசாலைகளில் தமிழ் மொழி தழைத்தோங்கவும் நீண்டகாலமாக அவுஸ்திரேலியாவில் பேராசிரியர் ஆசி. கந்தராஜா பெரும் பணி ஆற்றி வருகிறார். உயிரியல் தொழில்நுட்பவியல், விவசாயம், தாவரவியல் பூங்கனியியல்,
துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை நிறைவு செய்து பின்னாளில் பேராசிரியராக சிட்னி பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணயாற்றியவர். அத்துடன் இலங்கை, உட்பட சில நாடுகளிலும் வருகை தரு பேராசிரியராக பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயக மண்ணின் வாசத்தை நினைவூட்டும் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் படைப்புக்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளது. தமிழ் அறிவியல் இலக்கியத்தின் முன்னோடியாக திகழும் பேராசிரியர் ஆசி. கந்தராஜா இளம் பராயத்தில் கிழக்கு ஜேர்மனி பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று அங்கு உயர்கல்வியை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஜேர்மனியில் தான் கற்றகாலத்தில் 1970 களில் பெற்றுக்கொண்ட அரசியல் அனுபவங்களை பல வருடங்களுக்குப் பிறகு, ‘அகதியின் பேர்ளின் வாசல்’ என்ற நாவல் சர்வதேச அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அத்துடன் பேராசிரியர். ஆசி. கந்தராஜாவின் சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் ( Horizon ) சிங்களத்திலும் ( ஹெய்க்கோ ) வெளிவந்துள்ளன.
சிட்னியில் நிகழ்ந்த பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் பவள விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பேராசிரியருக்கு தெரிவித்துக் கொண்டனர்.