நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 07.02.2025 அன்று வெளியிட்டுள்ள பாரம்பரிய மருத்துவ நூல்கள் பட்டியலில் 227 ஆயுர்வேத நூல்கள், 112 யூனானி நூல்கள் 88 தமிழ்ச்சித்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. 250க்கும் மேற்பட்ட தமிழ்ச்சித்த மருத்துவ நூல்கள் இப்பட்டியலில் இடம்பெறாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்கள் வெவ்வேறு கலை, இலக்கியம், மருத்துவம், பண்பாட்டு மரபுக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவை அனைத்தையும் அழித்து, ஒற்றை மயமாக்கி, இந்தியாவை இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமான நாடாக்க தொடர்ந்து பல்வேறு அழித்தொழிப்பு நடவடிக்கைகளை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தி – சமஸ்கிருதத்தை வலிந்து திணித்து மாநில மொழிகளை அழிக்க முயலும் பாஜக அரசு, அதன் அடுத்த படிநிலையாக மருத்துவம் உள்ளிட்ட தேசிய இனங்களின் தனித்துவ மரபுக்கூறுகளையும் தற்போது அழித்தொழிக்கத் தொடங்கியுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் பட்டியலில் 88 தமிழச்சித்த மருத்துவ நூல்கள் மட்டுமே பட்டியலில் இருக்க, ஆயுர்வேத நூல்களின் எண்ணிக்கை அதைவிட மூன்று மடங்கு அதிகமாக இடம்பெற்றிருப்பது எப்படி? இதிலிருந்தே 250 தமிழ்ச்சித்த நூல்கள் நீக்கப்பட்டிருப்பது திட்டமிட்டச்சதி என்பது உறுதியாகிறது.
சமஸ்கிருத மொழியில் உள்ள நூல்கள் மட்டுமே ஆயுர்வேத நூல்களாகக் கருதப்பட்டுவந்த நிலையில், தற்போது அக்கட்டுப்பாட்டை நீக்கியுள்ள ஆயுஷ் அமைச்சகம் பிற மொழிகளில் உள்ள நூல்களையும் ஆயுர்வேதத்தில் சேர்த்துள்ளது. அதே சமயம் பிறமொழிகளில் இல்லாது, தமிழில் மட்டுமே இருக்கின்ற நூல்கள் மட்டுமே தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதன் மூலம் மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் இனி தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களாக ஏற்கப்படாததோடு, எளிதாக அவை ஆயுர்வேத நூல்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் இத்தகைய சூழ்ச்சி காரணமாக, தெலுங்கில் உள்ள “புலிப்பாணி வைத்திய சாத்திரம்” என்ற சித்த நூல் ஆயுர்வேத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. “ரச கந்தி மெழுகு”, சித்த மருத்துவத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்ட முக்கிய நூல் தெலுங்கு வழியாக தற்போது ஆயுர்வேதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற “காயத் திருமேனி எண்ணெய்,” வெட்டு மாறன் குளிகை போன்ற ‘சித்த வர்ம’ மருந்துகள் மலையாள மொழி வாயிலாக ஆயுர்வேதத்தில் சேர்க்கப்படவுள்ளது. மேலும், தமிழ் மொழியில் உள்ள “அகத்தியர் வைத்தியம்” போன்ற நூல்கள் ஆயுர்வேத நூலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய மருத்துவ ஞானி தமிழர் மூதாதை இராவணனின் குழந்தை மருத்துவ நூல்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்தி மொழியில் “ராவணன் கெளமார தந்திரம்” என்ற நூல் மட்டும் ஆயுர்வேத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சித்த சார நிகண்டு, சித்த யோக சங்கிரகம் போன்ற ‘சித்த’ அடைமொழி கொண்ட 9 தமிழ்ச்சித்த நூல்களையே ஆயுர்வேத நூலாகக் குறிப்பிட்டுள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.
அதுமட்டுமின்றி, சித்த மருத்துவ நூல்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் சித்த மருத்துவ நூல்கள் ஏற்கப்பட மாட்டாது. பிறமொழிகளில் உள்ள சித்த நூல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு முன் வெளியிடப்பட்ட தமிழ் மருத்துவ நூல்களை அங்கீகரிக்க முடியாது. அப்துல்லா சாகிப், வீரமாமுனிவர் போன்றவர்கள் சேகரித்துத் தந்த மருத்துவ நூல்கள் இவற்றில் சேர்க்கப்படவில்லை. யாழ்ப்பாணம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் பாதுகாக்கப்பட்ட தமிழ் சித்த நூல்கள் இப்பட்டியலில் இல்லை.
இக்கட்டுப்பாடுகளின் விளைவாக இனி, சித்த மருத்துவம் தன் தனித்துவத்தை இழந்து, தனி மருத்துவமுறையாக இல்லாமல், அனைத்தும் ஆயுர்வேதமாக மாறிவிடும். இதன் மூலம், தமிழர் மருத்துவ அறிவு, வடமொழியில் களவாடப்பட்டு ஏற்கப்படும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழே என்றும், தமிழ் சித்த மருத்துவமே ஆயுர்வேத மருத்துவமாயிற்று என்றும் தமிழ்ப்பேரறிஞர்கள் க.நெடுஞ்செழியன், தேவநேயப் பாவாணர் உள்ளிட்டோர் தங்கள் ஆய்வின் மூலம் நிறுவியுள்ளனர்.
ஆகவே, தமிழ்நாட்டு அரசு, சித்த மருத்துவ அறிஞர்களின் குழுவை அமைத்து, பிப்ரவரி 7 அறிவிப்பில் உள்ள அட்டவணையை ஆய்வு செய்ய வேண்டும். சித்த நூல்களாகவே இருக்க வேண்டிய நூல்களை மீட்டுச் சித்த பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்திற்கே உரிய சித்த மருத்துவ நூல் பட்டியலை அரசு வெளியிடுவதோடு, தமிழர் மருத்துவ அறிவைப் பாதுகாக்கும் தனிச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக்கூட்டத்தொடரிலேயே இயற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இந்திய ஒன்றிய அரசு இது குறித்து மூன்று மாதத்திற்குள் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகத் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரிகள்:
1. ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம்: dcc-ayush@nic.in
2. தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம்: cmo@tn.gov.in, cmcell@tn.gov.in
நம் மூதாதைகள் நமக்களித்துச் சென்ற தமிழ் மருத்துவ அறிவு, அந்நியர்களால் அவர்களுடையதென களவாடப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழராய் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை அனைவரும் ஒன்றுபட்டு தமிழ்ச்சித்த மருத்துவத்தை மீட்போம்! தலைமுறை தாண்டி காப்போம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.